எதிர்வரும் காலத்தில் நாட்டிற்கு உகந்த தீர்மானங்களை உரியவாறு மேற்கொண்டு அனைத்துவித சவால்களுக்கு மத்தியிலும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மெதிரிகிரிய, திவுலங்கடவல, தர்மராஜ பிரிவெனா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (02) பிற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சிறந்த ஒரு சமூகத்தையும் கல்விகற்ற புத்திசாதுர்யமான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கான பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதில் மிக முக்கிய காரணமான சமயக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடு பூராகவும் பல்வேறு சமய கல்விக்கூடங்களில் காணப்படும் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றிற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.