ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுடன் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்த விடயம் கடந்த மூன்று வருடங்களில் நிரூபணமாகியுள்ளது. தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் பயணிக்க முடியாது.
எனவே விரைவில் தீர்க்கமான முடிவு ஒன்றை சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
விரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம். சுதந்திரக் கட்சியின் தனி அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அது குறித்து ஆராயவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் சுதந்திரக் கட்சியினர் இன்னும் அமைச்சரவை மாற்றத்தில் உள்வாங்காமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன மேலும் குறிப்பிடுகையில்
அமைச்சரவை மாற்றத்தில் நாங்கள் இன்னும் உள்வாங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை அதற்கான அழைப்பை விடுக்கவில்லை. எவ்வாறெனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது தொடர்ந்து சாத்தியமாகாது என்றே எங்களுக்கு தோன்றுகின்றது.
அதாவது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பயணிக்க முடியாது என்று கூறும் உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் எம்மை பொறுத்தவரையில் பிரதமர் என்பவர் ஒரு மனிதன் மட்டுமேயாவார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுடன் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஐக்கிய தேசிய இலங்கைக்கு பொருத்தமான பொருளாதார கொள்கைகளை கொண்டிருக்கவில்லை.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியானது அமெரிக்கா ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொருத்தமான பொருளாதாரக் கொள்கைகளையே கொண்டுள்ளது. அந்த கொள்கைகள் இலங்கைக்கு பொருத்தமாக அமையாது. இலங்கையானது தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது. எனவே நாம் அதனைத்தான் ஊக்குவிக்கவேண்டும்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி கடந்த மூன்று வருடங்களாக பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளையே முன்னெடுத்து வந்துள்ளது. அது வெற்றியடையவில்லை என்பது நிரூபணமாகின்றது.
அதனால் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் பயணிக்க முடியாது. எனவே விரைவில் தீர்க்கமான முடிவு ஒன்றை சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும். இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு சுதந்திரக் கட்சியினால் தொடர்ந்து அதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது. அது சாத்தியமற்ற நகர்வாகவே அமையும்.
அதனால் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை சுதந்திரக் கட்சி எடுக்கவேண்டியேற்படும். விரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம். தற்போதைய நிலைமையில் சுதந்திரக் கட்சியின் தனி அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அது குறித்து ஆராயவேண்டிய சூழல் ஏற்படும்.
அவ்வாறு மாற்று ஏற்பாடு ஒன்று குறித்து ஆராயாமல் தொடர்ந்து இவ்வாறு பயணிக்க முடியாது. எனவே சுதந்திரக் கட்சி விரைந்து உறுதியான மற்றும் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது என்றார்.