வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி விலகல்

238 0

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு இயக்குனராக பணியாற்றி வந்த பெண் ஹோப் கிக்ஸ் திடீரென பதவி விலகி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு இயக்குனராக பணியாற்றி வந்த பெண், ஹோப் கிக்ஸ் (வயது 29). மூத்த அதிகாரியான இவர், ஜனாதிபதி டிரம்பிடம் நீண்ட காலமாக ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவர் திடீரென பதவி விலகி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்து உள்ள அறிக்கையில், “என் நன்றியை ஜனாதிபதி டிரம்புக்கு தெரிவிப்பதற்கு வார்த்தை இல்லை. இந்த நாட்டை சிறப்பாக தொடர்ந்து வழிநடத்திச்செல்வதற்கு டிரம்புக்கும், அவரது நிர்வாகத்துக்கும் எனது வாழ்த்துக்கள்” என கூறி உள்ளார்.

வெள்ளை மாளிகையில் தகவல் தொடர்பு இயக்குனர் பதவியில் இருந்து இவர் விலகி இருப்பது, ஜனாதிபதி டிரம்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு பற்றி நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சபையின் உளவுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழுவின் முன் ஹோப் கிக்ஸ் ஆஜராகி சாட்சியம் அளித்து உள்ள நிலையில், பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் அவருக்கு ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “அவர் மிகவும் சாதுரியமானவர். உண்மையிலேயே சிறப்பானவர். அவரை நான் ரொம்பவும் தவற விடுகிறேன். இருப்பினும் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என கூறி உள்ளார்.

முன்னாள் மாடல் அழகியான இவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதற்கு முன்பிருந்தே அவரிடம் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment