தலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்து உள்ளார்.
தலீபான்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்து உள்ளார்.
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி, அந்த நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட அந்த தாக்குதல்களை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க போர் தொடுத்தது. தலீபான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. மக்களாட்சி மலரச்செய்தது.
ஆனால் அங்கு இஸ்லாமிய சட்டத்தின்படியான ஆட்சியை அமைப்பதற்காக தலீபான்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர்.
16 ஆண்டுகள் கடந்து போரிட்டும் தலீபான்களின் ஆதிக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியாமல் அமெரிக்க கூட்டுப்படைகள் திணறி வருகின்றன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 25 நாடுகள் கலந்துகொண்ட அமைதி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி பேசினார்.
அப்போது அவர் தலீபான்களை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் முன் வந்து உள்ளார்.
இது தலீபான்கள் விஷயத்தில் அஷரப் கனியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை காட்டுகிறது. இதுவரை அவர் தலீபான்களை பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் என்றுதான் அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி மாநாட்டில் அதிபர் அஷரப் கனி பேசும்போது, “சமரச பேச்சுவார்த்தைக்கு ஒரு அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அது போர் நிறுத்தத்துடன் கூடியதாக அமைதல் வேண்டும். தலீபான்கள், அதிகாரப்பூர்வ அலுவலகத்துடன் அரசியல் குழுவாக அங்கீகரிக்கப்படுவர். இதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலீபான்கள் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் விடுவிக்கப்படுவார்கள். அத்துடன் சர்வதேச தடை பட்டியலில் இருந்து தலீபான்கள் பெயர் நீக்கப்படும். தலீபான்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். முன்னாள் போராளிகளும், அகதிகளும் மறுசீரமைக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும்” எனவும் கூறினார்.
தலீபான்களை பொறுத்தமட்டில் இதுவரை ஆப்கானிஸ்தானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்தனர். அவர்கள் அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர்.
இந்த நிலையில் இருந்து தலீபான்கள் இப்போது மாறுவார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தலீபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பது போல் தோன்றவில்லை என்று அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ளது.
அதே நேரத்தில், “ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியும் என்று தோன்றவில்லை. அங்கு அரசியல் தீர்வுதான் காணப்பட வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் கூறி உள்ளார்.