மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க 14417 என்ற ஹெல்ப்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. சென்னையில் லேடி வெலிங்டன் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளை அவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க 14417 என்ற புதிய 24 மணி நேர ஹெல்ப்லைன் நம்பர் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இருக்கும் அறை கேமரா உதவியுடன் மூடி பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தவறு நடப்பதற்கு வாய்ப்பில்லை.
அரசு பள்ளிகளில் வரும் ஆண்டு தேர்வு மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு மையத்தில் உதவுவதை பறக்கும் படைகள் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சருடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ், இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் சென்றனர்.