எனது தந்தையை குறி வைத்தே என்னை கைது செய்துள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு சட்ட விரோத பண பரிமாற்றமே காரணம் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது. என்றாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் இந்திராணி முகர்ஜி கொடுத்துள்ள வாக்கு மூலம் தான் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆனால் இந்த காரணத்தை கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார். நேற்று டெல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்த படும் முன்பு அவர் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நட வடிக்கையாக என்னை கைது செய்துள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதவை. வேண்டும் என்றே என்னை இந்த வழக்கில் சிக்கி வைத்துள்ளனர்.
எனது தந்தையை மத்திய அரசு குறி வைத்துள்ளது. அதற்காகத்தான் இந்த ஒட்டு மொத்த நடவடிக்கையும் என்னை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
முன்னதாக கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்ததற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதிலும் அவர் எனது தந்தைக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளது என்று எழுதி கையெழுத்திட்டார்.
இதற்கிடையே சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்த இந்தி ராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாமலேயே பணம் பெற்றது எப்படி என்பது பற்றி விரிவாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் அவர்கள் மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் சொல்லி தான் பண பரிமாற்றங்கள் செய்ததாக கூறி உள்ளனர்.
எனவே இந்த வழக்கில் ப.சிதம்பரமும் சேர்க்கப்படுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.