தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான 100 கடன் திட்டங்கள்

249 0

தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரிகளை வலுவூட்டும் இணைந்த 100 கடன் முன்மொழிவுத்திட்டங்களை உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

அரச வங்கிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்களை வலுவூட்டி நாட்டின் தேசிய கைத்தொழில் துறையில் புத்தெழுச்சியை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டம் குறித்த அறிக்கையொன்றை எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதியில் தனக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சிடம் தெரிவித்தார்.

அரச வங்கிகளினூடாக ஈட்டப்படும் இலாபங்கள் எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடைகின்றது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, குறித்த நன்மைகள் பொருளாதார செயன்முறையில் சாதாரண மக்களையும் தொழில் முயற்சியாளர்களையும் சென்றடைவதற்கான திட்டங்கள் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த கடன் முன்மொழிவு முறைமை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு விரிவான பிரசார நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். பெரும்பாலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள முக்கிய பிரச்சினையாக அமைவது கடன் பெற்றுக்கொள்கின்றபோது விதிக்கப்படுகின்ற நிபந்தனைகளும் பிணை ஆவணங்கள் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடன் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் பிணை ஆவணங்களை குறைந்த மட்டத்தில் பேணி அசௌகரியங்களின்றி தொழில் முயற்சியாளர்கள் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான பின்புலத்தை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

வேலையற்ற பட்டதாரிகளை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் நோக்குடன் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். அரசியல் பேதங்களின்றி இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் நன்மைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கிராம சேவகர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

அரச வங்கிகள் மக்கள் நட்புடையவையாக இருக்க வேண்டும் என்பதுடன் கடன் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வருகின்ற பொதுமக்களுடன் மிகவும் சுமுகமாக செயற்பட்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது குறித்து பணிக்குழாமினரைத் தெளிவுபடுத்துமாறும் ஜனாதிபதி அரச வங்கிகளின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இலங்கை அரச வங்கிகள் வர்த்தகமயப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் சமூகப் பிரச்சினைகளை அறிந்து கொள்ளுதல் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான கடனை வழங்குதல் என்பன சிறந்த அளவில் பேணப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி உள்ளிட்ட நிதி அமைச்சின் கீழுள்ள அரச வங்கிகளினூடாக தேசிய, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்காக தற்போது நடைமுறைப்படுத்தும் கடன் முன்மொழிவு முறைமை தொடர்பாக விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி, தொழில் முயற்சியாளர்கள் மேற்கொள்கின்ற முன்மொழிவுகளைக் கருத்திற் கொண்டு இக்கடன் முன்மொழிவு முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவா விதாரண, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் ஆகியோரும் அரச வங்கிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

Leave a comment