உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது!

248 0

உள்ளூராட்சி சபைகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கையில் சிக்கல் உள்ள போதும் தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

25 வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றிராத சபைகளை அமைப்பதில் நடைமுறைச்சிக்கல் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டத்தை கட்சிகள் சரியான முறையில் பின்பற்றியிருந்தால் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை எழுந்திருக்காது. எனினும், தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முகங்கொடுத்து, பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தான் எழுத்துமூலம் அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

20 வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்ற கட்சிகளுக்கு பெண் பிரதிநிதித்துவத்தை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக அமைச்சில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றிலே அ வர் இதனை தெரிவித்தார்.

அதேநேரம், நடைபெற்றுமுடிந்த தேர்தலில் மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் உள்ளூராட்சி சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என்றும், எதிர்வரும் காலத்தில் நடைபெறக் கூடிய தேர்தலில் குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்படும் என்றும் அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்பட்டது. எனினும், சில உள்ளூராட்சி சபைகளைக் கூட்டுவதற்கு போதியளவு பெண்கள் பிரதிநிதித்துவம் இன்மையால் சில சபைகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. இருந்தபோதும் தற்பொழுதுள்ள சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தலில் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டத்தில் திருத்தப்படலாம் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். எனினும், நடைமுறையிலுள்ள சட்டத்தை மாற்றமின்றி தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், நடைமுறையிலுள்ள சட்டத்தை மாற்றமின்றி தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைய இதனை நடைமுறைப்படுத்த அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment