வட மாகாண முதலமைச்சரின் சிந்தனை வழியே எனது மக்கள் பணியை தொடர்ந்து வருகின்றேன்!-அனந்தி சசிதரன்

2560 0

வட மாகாண முதலமைச்சரின் சிந்தனை வழியே எனது மக்கள் பணியை தொடர்ந்து வருகின்றேன்! வட மாகாண சமூகசேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பெருமிதம்!

போரின் பாதிப்பிற்குள் நேரடியாக இருந்து வந்தவர் என்ற வகையில் மக்களுக்கான சேவையினை சிறந்த முறையில் ஆற்றுவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எனக்கு அமைச்சுப் பொறுப்புக்களை தந்திருந்த கௌரவ வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் சிந்தனை வழியே தடம்மாறாது எனது மக்கள் பணியைத் தொடர்ந்து வருவதாகவும் அது குறித்து பெருமிதம் கொள்வதாகவும் கௌரவ வட மாகாண சமூக சேவைகள், மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் கௌரவ திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாட்டில் வட மாகாண சமூக சேவைகள் அமைச்சு, வட மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் மத்திய அரசின் தேசிய சமூக சேவைகள் திணைக்களம், அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகம் மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகம் என்பவற்றின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவை கடந்த ஞாயிற்றுக்கிழமை(25.02.2018) கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. கௌரவ வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந் நிகழ்வில் அமைச்சர் அவர்கள் மேலும் கூறுகையில்

நடைபெற்று முடிந்த இனவழிப்பு யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் மூலமாக நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்த நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானித்து நடாத்தியுள்ளோம். மாகாண சபையின் வரையறைக்குள்ளாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து உங்களை முழுமையாக மீட்டெடுத்துவிட முடியாதென்ற போதிலும் ஏதோவொரு வகையிலாவது உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை ஒழுங்குபடுத்தியுள்ளோம்.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் பொறுப்பினை தந்தபோது கௌரவ முதலமைச்சர் அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார், “உங்களுடைய சேவையினை எமது மக்களுக்கு வழங்க வேண்டும். உங்களை நம்புகின்றோம். நீங்கள் நிச்சயமாக ஒரு போரின் பாதிப்பிற்குள் இருந்து வந்த பெண் என்ற வகையிலும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை கொண்ட பெண் என்ற வகையிலும் உங்களுக்கு மக்களின் பிரச்சினைகள் விளங்கும். ஏதாவது ஒன்றை எமது மக்கள் இந்த மாகாண சபையினூடாக பெற்றுக் கொள்வார்களே ஆனால் அதுதான் எங்களுக்கு பெரிய புண்ணியமாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

அந்தவகையில் கௌரவ முதலமைச்சர் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக எனது அமைச்சின் செயற்பாடுகளை மக்களின் துயர்போக்கும் வகையில் முன்னெடுத்து வருகின்றேன். நேற்று முல்லைத்தீவிலும் இன்று கிளிநொச்சியிலும் இந்த நடமாடும் சேவையினை நடாத்துவதற்கான உந்துசக்தியாக கௌரவ முதலமைச்சர் அவர்களின் சிந்தனையே அமைந்திருந்தது.

என்னுடைய வாக்கு வங்கிக்கான திட்டமாக இதனை நடாத்தவில்லை. இந்த மண்ணில் வாழ்ந்திருக்கின்றேன். கொடிய யுத்தத்தின் பாதிப்பிற்குள்ளாக உங்களுடன் ஒருத்தியாக நானும் பயணம் செய்திருக்கின்றேன். உங்களின் வலிகள், வேதனைகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து என்னால் உணர்ந்து கொள்ள முடியும். அதனால்தான் சம்பந்தப்பட்ட மத்திய அரசுடன் இணைந்து இதனை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் நீங்கள் நன்மை அடைவீர்களானால் அதுவே எங்களுக்கு ஆத்ம திருப்தியை தரும்.

இலங்கை அரசு முன்னெடுத்திருந்த கொடிய யுத்தமானது அதிகளவான பெண்களை விதவைகளாக்கியுள்ளது. பெண் தலைமைத்துவ குடும்பங்களை உருவாக்கியுள்ளது. ஊனமுற்றவர்களை கொண்டுவந்திருக்கின்றது. உடம்பில் சன்னங்களை சுமந்தவாறு அன்றாட வாழ்வை எதிர்நோக்கும் அவலநிலையில் பலரை உருவாக்கியுள்ளது. இன்னும் பலரை மாற்றுத்திறனாளிகளாக்கியுள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக போரினால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிய மாகாணமாக வடமாகாணம் உள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து எமது மக்களை மீட்டெடுத்து அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பாரிய கடப்பாடு இக் கொடிய யுத்தத்தை முன்னெடுத்த இலங்கை அரசிற்கே உண்டு.

வடக்கு மாகாண சபையினை எள்ளி நகையாடவோ, கிள்ளுக்கீரையாக கருதி செயற்படவோ நாங்கள் ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. எமக்கான அதிகாரங்கள் குறைவாக இருந்தாலும் அந்த வரையறைக்குள்ளாக எமது மக்களுக்கு எந்தளவிற்கு உதவிகளைச் செய்ய முடியுமோ அவற்றை செய்வதற்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம் என கௌரவ வட மாகாண சமூகசேவைகள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில், மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திரு வஜிர கம்புறு ஹமகே மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் திரு சுமித்த சிங்கப் புலி ஆகியோருடன், கௌரவ வட மாகாண சபை உறுப்பினர்களான திரு த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை மற்றும் திரு பசுபதிப்பிள்ளை அரியரட்ணம் ஆகியோரும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர்கள், வட மாகாண மகளிர் விவகார, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன், அமைச்சின் திணைக்கள பணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

மு.பகல் 9.00 மணி முதல் பி.பகல் 4.00 மணிவரை நடைபெற்றிருந்த இந்நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்டதை;தைச் சேர்ந்த 1300 பேர் வருகைதந்து பயன்பெற்றனர். அவர்களில் 500 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் உள்ளிட்ட உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டி முடிக்கப்பட்ட மலசலகூடத்திற்கான காசோலைகள் மற்றும் நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்பன வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment