கடும் காற்றுடன் கூடிய மழையினால் மலையகத்தில் பல வீடுகள் சேதம்

224 0

தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் சில சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 150ற்கும் மேற்பட்டோர் தோட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

மேலும், மாலை வேளைகளில் இடி, காற்றுடன் கூடிய மாலை பெய்வதால் அனைவரும் பாதுகாப்புடன், அல்லது பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றிரவு 8 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஹட்டன் சமனலகம பகுதியில் 7 வீடுகளின் கூரைத்தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில காலமாக மலையகத்தில் ஏற்பட்ட கடும் வரட்சி காலநிலையின் பின்னர் இரண்டு தினங்களாக ஹட்டன் தலவாக்கலை, மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றினாலே இவ்வாறு கூரைத்தகடுகள் அள்ளுண்டுள்ளது.

பாதிப்புக்குள்ளானவர்களின் கூரைப்பகுதிகள் புனரமைக்கப்பட்டு அதே குடியிருப்பில் வாழ்ந்து வருவதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment