ஜெயலலிதாவின் சிலையை கேலிக் கூத்தாக்கி விட்டனர் – ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மீது தினகரன் தாக்கு

333 0

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை கேலிக் கூத்தாக்கி விட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

குமரி மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை வேலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு என்னை அழைத்தார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் வேலூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட அனுமதி மறுத்ததால் குமரி மாவட்டத்தில் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடத்தப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை நடத்துவதற்கு கூட ஆட்சியாளர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.

இன்றைய தினம் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலையை திறந்து வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவின் சிலை என்று கூறி யாரோ ஒருவருடைய சிலையை திறந்து வைத்திருக்கிறார்கள். அந்த சிலை எடப்பாடியின் அம்மாவா? ஓ.பன்னீர்செல்வத்தின் அம்மாவா? என்று சமூக ஊடகங்களில் அந்த சிலையை பற்றி வந்த கருத்துகளால் நகைப்புதான் வருகிறது.

சிலர் அந்த சிலை வளர்மதி போல இருக்கிறது என்கிறார்கள். ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றால் மொட்டை போடுவேன் என்று கூறியவர்தான் இந்த வளர்மதி.

30 ஆண்டுகள் இந்தியாவே உற்று நோக்கும் இரும்பு பெண்மணியாக இருந்தவரின் சிலையை கடமைக்கு வைத்திருக்கிறார்கள். முழு மனதோடுடன் ஜெயலலிதா சிலையை அவர்கள் வைக்க நினைத்திருந்தால் அந்த சிலை சரியாக வந்திருக்கும்.

அந்த விழாவில் பேசிய தர்மயுத்த நாயகன் சட்டசபையில் நிதிநிலை அறிக்கை வாசிப்பது போன்று இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்து விட்டு இப்போது இப்படி பேசுகிறார்.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டு இப்போது நம்மை பார்த்து துரோகி என்கிறார். துரோகத்தின் ஒரு பக்கம் பன்னீர்செல்வம் என்றால் மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி. வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பன் போன்று, பாகுபலி சினிமா கட்டப்பா போல, எம்.ஜி.ஆர். சினிமாவில் வரும் பி.எஸ். வீரப்பா, நம்பியார்போல அவர்கள் இருக்கிறார்கள்.

2014 தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை வீசியபோது, மோடியா? அல்லது இந்த லேடியா? எனக்கேட்டு தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அவர், இருந்தவரை மக்களை பாதிக்கும் சட்டங்களான நீட், ஜி.எஸ்.டி. போன்றவற்றை தமிழகத்தில் நுழைய விடவில்லை. ஆனால் அவர், மறைந்த பிறகு பல திட்டங்களை இவர்கள் அனுமதித்து விட்டார்கள்.

மானியங்கள் ஒழிக்கப்பட வேண்டும், இலவசம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் பிரதமர் மோடியை அழைத்து வந்து ஜெயலலிதா அறிவித்த ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கிவைத்துள்ளனர். பஸ் கட்டணத்தை திடீர் என இரவில் 60 சதவீதம் அதிகரித்தது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா ஆட்சியில் 2 கோடி மக்கள் பயணிக்கும் பஸ் கட்டணத்தை மக்களை பாதிக்காமல் கொண்டு வந்தார். ஆனால் இவர்கள் கொரில்லா தாக்குதல் போல கட்டணத்தை உயர்த்தினார்கள். மத்தியில் ஆளுபவர்களை பயன்படுத்தி அரசு பஸ்சுக்கான டீசலை மானியமாக பெற்று கட்டண உயர்வை தவிர்த்து இருக்கலாம்.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா முட்டுக்கட்டை போடுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு சொன்னதுபோல கர்நாடகம் தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருக தொடங்கி விட்டன.

ஆர்.கே. நகர் மக்கள் தேர்தலில் எனக்கு நல்ல தீர்ப்பு வழங்கினார்கள். அதற்கு முந்தைய நாள் குமரி மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள வந்த என்னை தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தீர்கள். ஆர்.கே. தேர்தல் மூலம் ஏழரை கோடி மக்களின் உணர்வு வெளிப்பட்டு இருக்கிறது.

குமரி மாவட்டம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டமாகும். தமிழ்நாட்டுக்கு முன்னோடி மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்கிறது. எனவே இங்குள்ளவர்களுக்கு யார் மதசார்பற்ற, மத நல்லிணக்க ஆட்சியை தருவார்கள் என்று நன்றாக தெரியும். தற்போதுள்ள ஆட்சியை மீட்க, சின்னத்தை மீட்க அம்மாவின் உண்மை தொண்டர்களாகிய எங்களுக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும். நாம் இழந்த சின்னத்தை பெற வேண்டுமென்று கோர்ட்டில் போராடி வருகிறோம். குக்கர் சின்னம் வேண்டுமென்று கேட்டிருக்கிறோம். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம்.

குமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின்னர் புயல் தாக்கி 16 நாட்கள் கழித்த பிறகே எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்து பார்த்தார். ‘ஒக்கி‘ புயல் சமயம் நான் இங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறும்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் மனுவாக கொடுத்தார்கள். அவை அனைத்தும், எங்கள் இயக்கம் தலைமையில் அம்மா ஆட்சி அமைந்ததும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

உங்கள் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கண்டிப்பாக அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். அதற்கு இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எங்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை நீங்கள் வெற்றிபெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment