ஜி20 மாநாட்டின் போது இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.பிரதமர் மோடி ‘ஜி20’ நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவின் ஹேங்சூ சென்றுள்ளார். அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று சீன பிரதமர் லி கெஜியாங்கை சந்தித்து பேசினார்.
ஜி20 மாநாட்டின் இறுதி நாளான இன்று காலை இங்கிலாந்து பிரதமர் தெரசாவை சந்தித்து பேசினார். இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து தெரசா அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்றார். இவர் இங்கிலாந்து நாட்டின் 2-வது பெண் பிரதமர் ஆவார். இதற்கு முன் மார்கரெட் தாட்சர் இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தார்.
தெரசா பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவரும் பிரதமர் மோடியும் முதல் முறையாக சந்தித்து பேசினார்கள். தெரசாவுக்கு மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் பல்வேறு முக்கிய சர்வதேச பிரச்சினைகள் பற்றி இருவரும் ஆலோசித்தனர். தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.