சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 32 கண்காணிப்பு கேமராக்கள்

346 0

201609050923324399_32-surveillance-cameras-in-Chennai-Police-Commissioner_SECVPFசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயற்கைகோள் இணைப்புடன் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் கமிஷனர் தனது செல்போனில் எங்கு இருந்தாலும் பார்க்கலாம்.

சென்னை நகரின் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் கேமரா மயமாகிறது. கடைகள், வீடுகளிலும் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு இந்த கேமராக்கள் தான் போலீசாருக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளன.

தமிழகத்தை உலுக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கொலையாளி ராம்குமாரை பிடிப்பதற்கும் கேமரா காட்சி தான் பெரிதும் உதவியது. இப்படி எங்கு பார்த்தாலும் கேமராக்களின் பாதுகாப்பு வளையம் ஆக்கிரமித்து நிற்கிறது. தற்போது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகமும் கேமரா வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும் 10 மாடி கட்டிடம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது கமிஷனர் அலுவலக வளாகம் முழுவதும் மேலும் 10 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

புயல், மழை என எந்த சீதோஷ்ண நிலையிலும் இந்த கேமராக்கள் துல்லியமாக செயல்படும் தன்மை கொண்டவை. இந்த கேமராக்கள் செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் காட்சிகளை ஒருங்கிணைத்து பார்க்க கமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் ‘ஷிப்டு’ முறையில் பணியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் கமிஷனர் தனது செல்போனிலேயே எந்த இடத்தில் இருந்தும் பார்க்கலாம்.