பிரபல மாத இதழின் அட்டைப்பட விளம்பரத்தில் விஷ்ணு அவதாரம் போல் காட்சியளித்த கிரிக்கெட் வீரர் தோனி மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது.
இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று அந்தகட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் இந்துக் கடவுளை அவமதிப்பது போல உள்ளதாக ஆந்திராவில் உள்ள அனந்தபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஆந்திர நீதிமன்றம் தோனிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
அனந்தபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு எதிராகதோனி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆந்திர நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் தோனி மீதான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.