விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்

349 0

201609051235043035_Vinayagar-chaturthi-celebration-in-TN_SECVPFதமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சென்னையில் கடந்த ஆண்டை போல 2,500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதில் பெரும்பாலான இடங்களில் இன்று சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினரும், பொதுநல சங்கத்தினரும் காலையிலேயே விநாயகர் சிலைகளை நிறுவி சுற்றி பந்தல் அமைத்தனர். பின்னர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

விநாயகர் சிலைகளை நிறுவி இருக்கும் விழா கமிட்டியினர் தனியாக பாதுகாப்பு குழுக்களையும் அமைத்துள்ளனர். இக்குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் 24 மணி நேரமும், ஷிப்டு முறையில் போலீசுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிபெருக்கி மூலமாக விநாயகரின் பக்தி பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன. இதனால் இன்று சென்னை மாநகரில் திரும்பிய திசையெல்லாம் விழாக் கோலமாகவே காட்சி அளித்தது.

பல்வேறு விதமான வண்ண வண்ண விநாயகர்கள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. கீழ்க்கட்டளை பஸ் நிலையம் அருகில் சிவலிங்கத்துக்கு பூஜை செய்வது போல கடல்சிற்பி விநாயகர் சிலை வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடி உயரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தீர்வதற்கும், தமிழக விவசாயிகளின் பிரச்சினை தீரவும் இந்த விநாயகருக்கு 21 புனிதநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம் ரவிக்குமார், சென்னை மண்டல செயலாளர் ஆனந்த், தலைவர் செந்தில் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

சென்னையில் நாளை மறுநாளுக்குள் சிலைகளை பூஜைக்காக வைத்துவிட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சிலைகள் அனைத்தும் பூஜை முடிந்த பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. வருகிற 10, 11-ந்தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.