9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

264 0

பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டார்.

யாழ்.தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் தரம் 4 இல் கல்வி கற்ற 9 வயது மாணவி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பாடசாலை அதிபரே தன்னை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளையடுத்து, சந்தேகநபருக்கு எதிராக, சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதி தனது தீர்ப்பில்,

“சிறுமியால் கூறப்பட்ட சாட்சியத்தையும் மருத்துவ அறிக்கையையும் வைத்து இந்த மன்று எதிரியைக் குற்றவாளியாக அறிவிக்கின்றது.

குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, குற்றவாளி 10 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். தண்டப்பணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தவறின் ஒரு மாதகால கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்

Leave a comment