திருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்றுவதா?

463 0

201609051316009518_Karunanidhi-condemns-for-thiruvalluvar-statue-removed-in_SECVPFதிருப்போரூரில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இடித்து அகற்றியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
22.7.2008 அன்று கழக ஆட்சியில் சென்னை திருப்போரூர், பழைய மாமல்லபுரம் சாலையிலே வேம்புலியம்மன் கோவில் அருகிலே அண்ணா சமுதாயக் கூடமும், அந்தச் சமுதாயக்கூட வளாகத்தில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு, அன்றைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தம்பி, தா.மோ. அன்பரசன் அதனைத் திறந்து வைத்திருக்கிறார்.

2011-ஆம் ஆண்டு வரை முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்த அந்தச் சிறுவர் பூங்கா, பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிக்கப்படவே இல்லை.

அந்தப் பகுதியிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் அந்தப் பூங்காவில் திருவள்ளுவர் சிலை அமைக்க முயற்சியெடுத்து சிலையை அங்கே நிறுவி, மாவட்ட நிர்வாகத்திடம் அதனைத் திறக்க விண்ணப்பித்து இரண்டாண்டுகள் ஆகியும் அதற்கு இது வரை அனுமதி கிடைக்காததால், சிலை மூடப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.

மீண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதிய போது பத்து வகையான விளக்கங்களைக்கேட்டு திருப்போரூர் தமிழ் அமைப்புகளுக்கு கடிதம் தான் வந்தது. அந்த விளக்கங்களுக்கும் உரிய பதில் எழுதி அனுப்பப்பட்டு விட்டது.

சிலை திறப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீதும், தொடர்ந்து அளிக்கப்பட்ட விளக்கத்தின் மீதும் எந்தவித முடிவும் எடுக்காத நிலையில் தான் 3.9.2016 அன்று அதனை மாவட்ட நிர்வாகத்தினர் இடித்துத் தகர்த்திருக்கிறார்கள்.

அய்யன் திருவள்ளுவரின் சிலையை வைப்பதற்குக் கூட இந்த ஆட்சியினர் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்ததோடு, தற்போது அதனை அகற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இது போலவே, ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அ.தி.மு.க. அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ள கருப்பண்ணன் என்பவர் பேசும்போது சுற்றிலும் பிரச்சினைகளுக்கிடையேயும் மிகுந்த சிரமத்திற்கிடையேயும், வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் விவசாயிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, “விவசாயிகள் பைனான்ஸ் கம்பெனி நடத்துகின்றனர். வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். கோடிக் கணக்கில் பணம் வைத்துள்ளதோடு பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்துவது தேவையற்ற போராட்டம்” என்றெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளை, விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார்.

இது போலவே மற்றொரு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியும் பேசியிருக்கிறார். விவசாய சங்கத்தினர் மிகவும் மனம் நொந்து அ.தி.மு.க. அமைச்சர்களின் இப்படிப்பட்ட பேச்சுகள் விவசாயிகளை மிகவும் மனம் நோக வைத்திருப்பதாகவும், இந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள்.

தமிழக விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க எவ்வித முயற்சியும் செய்யாமல், அவர்களைப் பற்றிக் கீழ்த் தரமாகப் பேசும் அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுகளுக்கும், திருப்போரூரில் மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ள அத்துமீறிய நடவடிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.