மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் – ஓவியருக்கு சிறைத்தண்டனை

470 0

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை கோமாளி போல சித்தரித்த பிரபல ஓவியர் பாஹ்மி ரேசாவிற்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது, பாஹ்மி ரேசா மீது ஆபாசமான, தவறான, அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற, ஒரு நபரை தொல்லை செய்ய விரும்புகிற ஆன்லைன் உள்ளடக்கத்தை பரப்பியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விசாரணை முடிந்து உள்ள நிலையில், அவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இது தொடர்பாக பாஹ்மி ரேசாவின் வக்கீல் சியாரெத்சான் ஜோஹன் கூறும்போது, “இந்த தண்டனை எதன் அடிப்படையில் விதிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிபதி எதுவும் குறிப்பிடவில்லை. இதை எதிர்த்து அப்பீல் செய்வோம்” என குறிப்பிட்டார்.

இதே போன்று மற்றொரு கோர்ட்டிலும் பாஹ்மி ரேசா இன்னொரு வழக்கை சந்தித்து வருகிறார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அரசு பணத்தில் பல கோடி ஊழல் செய்ததாக எழுந்து உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசுக்கு எதிராக செயல்படுகிற எதிர்க்கட்சி தலைவர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து, பாஹ்மி ரேசா செயல்பட்டு வருகிறார். போராட்டங்களிலும் பங்கு எடுத்து வருகிறார்.

இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுகிற இணைய தளங்களை மலேசிய அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment