போராட்டம் தொடங்கி ஒருவருடம் நிறைவு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

259 0

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஓராண்டு முடிந்த நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே இரகசிய முகாமிலுள்ள எமது உறவுகளை மீட்டுத் தா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஐவர் உயிரிழந்த நிலையில் இந்த மக்களுக்கான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

யுத்தகாலத்திலும் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று ஒரு வருடமாக தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் தொடர் போராட்டம் ஆரம்பித்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இனிவரும் நாட்களில் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றவுள்ளதாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment