தமிழ் மொழியில் அறிக்கை இல்லாததால் பிணைமுறி விவாதம் ஒத்திவைப்பு

259 0

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பிரதிகள் இல்லாததினால் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் மட்டும் குறித்த அறிக்கை இருப்பதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ்மொழியில் பிரதிகள் வரும்வரை விவாதத்திற்கு ஒத்துழைக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டியதை தொடர்ந்தே விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பகல் 1 மணியளவில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையான மத்திய வங்கி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

எனினும் குறித்த அறிக்கை வெறும் சிங்கள மொழியில் மட்டுமே காணப்படுவதால் தாய் மொழியிலும், ஆங்கில மொழியிலும் காணப்படாததினால் விவாதத்திற்கு ஒத்துழைக்க முடியாது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனை கவனத்திற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, குறித்த விசாரணை அறிக்கை 8000 பக்கங்களைக் கொண்டதனால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அவற்றை மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாமதமாகியதாக சுட்டிக்காட்டியதோடு அதற்காக வருந்துவதாகவும் கூறினார்.

இதனையடுத்து சபையின் அனுமதியை சபாநாயகர் கோரிய நிலையில் விவாதத்தை நாளை வரை ஒத்திவைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment