இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சிறை கைதிகளின் உறவினர்கள், காணாமல் போனோரின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர்.
நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும், அதன் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும், விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புடன் புதிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு நல்கியிருந்த போதிலும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என இந்தப் போராட்டத்தின் போது சுட்டிகாட்டப்பட்டது.
தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும் பட்சத்தில் நல்லிணக்க முயற்சிகளுக்காக அரசாங்கம் அமைக்கவுள்ள பொறிமுறை மற்றும் அலுவலகங்களின் செயற்பாட்டுக்கு தங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக இந்தப் போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.