பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாக்குறுதி அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த “அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை எதிர்வரும் உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் வடக்கு மாகாண பட்டதாரிகள் அரசாங்கம் இரு வாரகாலப்பகுதிக்குள் தமது நியமனம் தொடர்பில் நடவடிக்கை ஏதும் எடுக்காதுவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான வடக்கு மாகாண பட்டதாரிகள் இன்று (19.02.2018) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு அருகில் ஒன்று கூடி தமது நியமனங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இதன்போது குறிப்பிட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவர்,
“நாம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் கடந்த ஆண்டு மாதக்கணக்காக தொடர்போராட்டங்களை நடத்தினோம். அதன்போது எமக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் பெற்றுத்தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. எனினும் தேர்தலைக் காரணம்காட்டிய அரசு தேர்தல் முடிவடைந்ததும் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது, தேர்தல் முடிவடைந்து விட்டது. எனவே நாம் ஒன்றுகூடி எனது நியமனங்களை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதங்கள் அனுப்பவுள்ளோம். அவர்களை நேரில் சந்திக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
எனினும் எமது முயற்சிகளுக்கு சாதகமான பதிலளிக்காது தொடர்ந்து அரசாங்கம் எம்மை ஏமாற்றினால் இரு வாரத்தின் பின் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளோம்” – என்றார்.