தலைமன்னார் கிராம மீனவர்கள் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

243 0

இலங்கை கடல்பரப்பில் உள்ள ‘தீடை’ பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுவரும் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூரை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீடை பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற ஒரு தொகுதி மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியதை கண்டித்து தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மதியம் தலைமைன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தலைமன்னார் கிராம மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக தீடை பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடியில் ஈடுபட்டு வந்தனர்.

அண்மைக்காலமாக தலைமன்னார் கிராமத்தில் இருந்து தீடைக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு தொடர்ச்சியாக கடற்படையினர் இடையூறை ஏற்படுத்தி வந்துள்ளதோடு,மீன் பிடிக்க அனுமதி மறுத்துள்ளனர்.

குறிப்பாக குறித்த தீடை பகுதியில் பறவைகள் வந்து செல்வதாக கூறி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கடற்படையூடாக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதியை மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

எனினும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் குறித்த தீடைப்பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

எனினும் தொடர்ச்சியாக கடற்படையினர் மீனவர்களுக்கு அனுமதியை மறுத்து வந்துள்ளனர்.

இதனால் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தமது பிரச்சினை தொடர்பில் தலைமன்னார் பொலிஸ், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எழுத்து மூலம் தமது பிரச்சினை தொடர்பில் மகஜர் கையளித்திருந்தனர்.

எனினும் மீனவர்களின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. மீனவர்கள் தொடர்ச்சியாக கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தீடை பகுதிக்குச் சென்று மீன் பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று   ஞாயிற்றுக்கிழமை இரவு தலைமன்னார் கிராமத்தில் இருந்து தீடை பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்களை கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபட விடாததோடு,அச்சுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

Leave a comment