கலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

409 0

TCC Suwiss Logoதரணியெங்கும் பரந்து வாழ்ந்தாலும், போரில் பல சாதனைகளைப் புரிந்தாலும் வேற்று மனிதரை துன்புறுத்தாது மதித்து வாழ்ந்துவரும் தமிழினத்தை இன்று கண்டவனெல்லாம் கையிலெடுத்து அடிக்க விளைகின்றான். தமிழனை எடுத்து தமிழருக்கே அடிக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் அடுத்த முயற்சியாக Zurich இல் நடைபெறவிருக்கும் food and trade என்ற சிங்கள ஏகாதிபத்திய சிந்தனை « உணவும் களிப்பும் » என முகமூடி அணிந்து வருகிறது.

1920 களில் மேலோங்கிய சிங்கள மேலாதிக்க சிந்தனை ஓரு இனஅழிப்பின் கட்டுமானமாகப் பரிணாமித்து வளர்ந்து தமிழர் பிரதேசங்களில் இனப்பரம்பலை மாற்றியமைத்தது. சிங்கள பௌத்த வெறியினை ஊட்டியும், சிங்களவர் பிள்ளைகளை அதிகம் ஈன்றெடுத்தும் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. அத்தோடு தமிழர் பிரதேசங்கள் எங்கும் பயங்கரவாதச் செயல்களை முன்னெடுத்தது. கொலைகளூடாகவும், மானபங்கப்படுத்தல் ஊடாகவும் தமிழ் மக்களை கிலிகொள்ளச் செய்து அங்கிருந்து விரட்டியடித்தது.

பெண்களின் மார்புகளை அறுத்தல், ஆண்களைக் கொரூரமாகக் கொலைசெய்தல், குழந்தைகளை கத்திமுனையில் கொன்று குவித்தல், கொதி தாருக்குள் உயிருடன் வீசுதல், கூட்டு பாலியல் வல்லுறவுகள், கூட்டுப்படுகொலைகள், பல்லாயிரக் கணக்கானோரை காணாமல் துடைத்தொழித்தல் என சிங்களப் பயங்கரவாதிகளின் மிருக வெறியாட்டம் தலைதூக்கித் தாண்டவம் ஆடியது. ஒன்றா இரண்டா பெயர் சொல்ல? பல இலட்சம் மக்களையல்லவா கொன்று குவித்தார்கள் சிங்கள அரச பயங்கரவாதிகள். சமமாக வாழவிடுங்கள் என்று கேட்ட தமிழினத்தைக் குண்டுகள் போட்டுக் கொன்று குவித்தனர். நீதிகேட்ட தலைவர்களை, ஊடகவியளாளர்களை கொன்றனர். கூடிநின்ற இளைஞர்களைக் குழிதோண்டிப் புதைத்தனர். தமிழ்த் தெருக்களை மறித்திருந்த இனவெறி இராணுவத்தினர் எங்கள் பெண்களைக் குதறி நாசம் செய்தனர்.

இன்று வந்து தமிழருக்கு உணவு செய்து தரப்போகினம் என்கிறார்கள். மூன்றரை இலட்சம் மக்களைக் கஞ்சிக்கும் வழியில்லாது பட்டினிபோட்டு குண்டுகளைவீசிக் கொன்றவர்கள் எங்களுக்கு ஏன் விழா எடுக்கவேண்டும்? தமிழ்ப் பெண்போராளிகள் செத்துக் கிடந்தபோது அவர்களது ஆடைகளைக் களைந்து குரோதம் புரிந்தது சிறீலங்கா பேரினவாத அரசின் இராணுவம். கணவன், பிள்ளைகளின் கண்முன்னே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி அவர்களது உடலை கைக்குண்டால் சிதறடித்த இராணுவப் பேய்களும், அதன் அரசும் சுவிஸ்வாழ் எங்கள் பெண்கள் சிலரைப் பிடித்து தனது நல்லாட்;சியை வெளிப்படுத்த விளைகின்றானாம். மூன்று சகாப்தமாக எதிரிகளை விரட்டியடித்த எங்கள் பெண் சமூகத்தை தனது கேளிக்கைப் பொருளாகவும், சர்வதேசத்திற்குக் காட்டும் நல்லிணக்க அரசின் கைப்பிள்ளைகளாகவும் பாவிக்க விளைகிறது சிங்களம்.

அன்பார்ந்த உறவுகளே! எமது குழந்தைகளின் அழுகுரலும் எமது பெண்களின் ஐயோ… ஐயோ.. என்ற ஆதரவற்ற அவலக்குரலும் எம் காதுகளில் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சிங்கள அரச, இராணுவக் கட்டமைப்புகளின் அத்தனை உறுப்பினர்களிலும் எமது இரத்த வாடை அடிக்கிறது. நல்லாட்சி என்று வந்தவர்கள் கடந்தகாலங்களில் பாரிய கொலைகளை அரங்கேற்றியவர்களே. அவர்களின் கரங்களிலும் அதே அளவு இரத்த வாடைவீசுகிறது. ஆகவேதான் இன்றும் எங்கள் இனத்தின் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இன்றும் எமது பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்களை இழிவுபடுத்தி அழிக்கும் செயற்பாடுகள் அன்றாடம் நடைபெறுகின்றன.

காணாமல் போனோரின் பெற்றோர்கள் உறவினர் போராடுகின்றனர். காணிகளை மீளளிக்குமாறு போராடுகின்றனர். கைதிகளை விடுதலை செய்யுமாறு போராடுகின்றனர். முன்னைநாள் போராளிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். சொந்த மண்ணில் வாழும் தமிழர்கள் வியாபாரமோ, தொழிலோ செய்யமுடியாது போராடுகின்றனர். சிங்கள இராணுவமே எங்கள் பூர்வீக பிரதேசங்களிலிருந்து வெளியேறு என்று போராடுகின்றனர். தம் கற்பைக் காப்பதற்காய் அன்றாடம் எங்கள் பெண்கள் போராடுகின்றனர். எங்களை சுதந்திரமாக வாழவிடு என்று போராடுகின்றனர். எங்களது பாதுகாப்பை சர்வதேசமே கையிலெடு என்று போராடுகின்றனர். நீதிகொடு என்று போராடுகின்றனர்.

அடிப்படை மனித உரிமைகளுக்காக தாயகத்தில் தமிழ்மக்கள் போராடிக் கொண்டிருக்க, அதை அடக்குவதற்கு இனவெறிச் சிங்கள இராணுவத்தை அங்கு நிறுத்திவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் பலத்தை உடைக்க முயற்சிக்கின்றது. இதனூடாக புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்தக்கூடிய சர்வதேச அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கு பெரும் எத்தனம் செய்கின்றது சிறிலங்கா அரசு.

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளே! தமிழரின் துயர் அறிந்த சுவிஸ்வாழ் மக்களே, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைப் பிரித்து, தமிழர்களுக்குள் துரோகிகள் என்று குறிப்பிட்ட மக்களை இனம்காட்டி, குழுமோதல்களை ஏற்படுத்தி எமது சர்வதேச பலத்தைக் குறைக்கும் நயவஞ்சக நோக்கோடு சிங்களப் பாசிச இனப்படுகொலையாளர்களால் நடாத்தபடவிருக்கும் மேற்படி நிகழ்வினை அனைவரும் புறக்கணிப்போம். அவர்கள் எங்கெல்லாம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் தமிழர் நாம் அணிதிரண்டு இனப்படுகொலையாளர்களின் முகத்திரை கிழிப்போம்.

எமது விடுதலைப் போராட்டம் பாரிய சாதனைகளைப் படைத்து ஒர் அரசுநோக்கிய அரசினை உருவாக்க பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்த தமிழ் வர்த்தக சமுதாயமும், கலைஞர்களும், தேசப்பற்று நிறைந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களும் இந்நிகழ்வைப் புறக்கணிப்பதோடு சுவிஸ் நாட்டின் அரசுக்கும் தமிழர்களின் நிலைப்பாட்டினை எடுத்துரைக்கும்படி அன்பாக வேண்டுகின்றோம்.

எமது தாயகம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். எம்மீது காலத்திற்குக் காலம் நடாத்தப்பட்ட இனஅழிப்பிற்கு சர்வதேச விசாரணையின் மூலம் நீதி கிடைக்க வேண்டும், அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். நாம் விடுதலை பெறும்வரை தொடர்ந்து ஒன்று திரண்டு போராடுவோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பேர்ண், 04.09.2016

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்