மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மலேசியாவுக்குச் சென்றிருந்த ராஜபக்ஷவுடன் சிறிலுங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவும் மலேசியா புறப்பட்டிருந்தார். அவரை சிறீலங்காவுக்கு வழியனுப்புவதற்காக விமானநிலையத்திற்கு வந்த இவ்விருவர் மீதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ கூறியுள்ளார்.
தலையில் காயமடைந்த இருவரும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ எங்கே என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூதுவரிடம் வினவியபோது அதனைப் பொலிசாரிடம் விசாரியுங்கள் எனத் தெரிவித்தார் என அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதுவரின் நெற்றியிலிருந்து இரத்தம் கொட்டும்வரை தாக்குதல் நடாத்தினர் எனவும் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் மகிந்தவோ, மகிந்தவின் குழுவினர் எவருமே காயமடையவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.