சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது போக்குவரத்துத்துறை தொடர்பாக தி.மு.க. நடத்திய ஆய்வு அறிக்கையை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, செங்குட்டுவன் மற்றும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவை தி.மு.க. அமைத்தது.
அந்த குழுவினர் நடத்திய ஆய்வு அறிக்கை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
தி.மு.க.வின் ஆய்வு அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்தில் நேரம் கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சரிடம் தி.மு.க.வின் ஆய்வு அறிக்கையை வழங்கி பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, அதனை திரும்ப பெற கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வலியுறுத்தினார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய அலுவலகத்தில் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.