சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை எடுப்போம் என்று தி.மு.க. சொல்வது தவறான கருத்து என பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது அரசியல் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் முதல்-அமைச்சராக பணியாற்றிய பெண் தலைவர். குற்ற வழக்குகள் இருக்கட்டும். குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டதாக இருக்கட்டும். தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா முக்கிய பங்கை வகித்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அப்படியிருக்கும் போது அவரது படத்தை திறப்பதில் எந்தவித தவறும் இல்லை. நீங்கள் ஊழலை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. விஞ்ஞான பூர்வமாக ஊழல்கள் செய்து இருப்பதாக கருத்துகள் உள்ளன.
சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை எடுப்போம் என்று தி.மு.க. சொல்வது தவறான கருத்தாகும். அவர்கள் வைத்தால் நாங்கள் அகற்றுவோம் என்று நினைப்பது சரியானது அல்ல. இது நல்ல அரசியலுக்கு அழகல்ல. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்விற்கு மரியாதை தரவேண்டும். மறைந்த தலைவர் மீது தாக்குதல் நடத்த வேண்டுமா? இவ்வாறு அவர் கூறினார்.