மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ‘அம்மா இரு சக்கர வாகனம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி முதல்கட்டமாக ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகிற 24-ந் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பம் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும் என்றும் கடந்த ஜனவரி 22-ந் தேதி அறிவிக்கப்பட்டது. மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கவும், இருசக்கர வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் பெறவும் பெண்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்தனர்.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, மானிய ஸ்கூட்டர் திட்டத்தினை செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. மானிய ஸ்கூட்டர் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பெறப்பட்டன.
அதன்படி தமிழகம் முழுவதிலும் இருந்து கடந்த 10-ந் தேதி வரையிலான நிலவரப்படி 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மாவட்டங்கள் வாரியாக விண்ணப்பித்தவர்கள் விவரம் வருமாறு:-
அரியலூர் 3,665, கோவை 22,912, கடலூர் 10,514, சென்னை 35,028, தர்மபுரி 7,319, திண்டுக்கல் 8,262, ஈரோடு 14,493, காஞ்சீபுரம் 16,714, கன்னியாகுமரி 12,259, கரூர் 5,749, கிருஷ்ணகிரி 6,708, மதுரை 12,375, நாகப்பட்டினம் 6,121, நாமக்கல் 12,191, நீலகிரி 2,308, பெரம்பலூர் 2,956, புதுக்கோட்டை 6,114, ராமநாதபுரம் 5,117, சேலம் 19,847, சிவகங்கை 7,371, தஞ்சாவூர் 11,770, தேனி 3,172, திருப்பூர் 13,886, திருவள்ளூர் 9,026, திருவாரூர் 4,596, தூத்துக்குடி 8,855, நெல்லை 12,359, திருச்சி 11,530, திருவண்ணாமலை 9,492, வேலூர் 14,616, விழுப்புரம் 10,913, விருதுநகர் 7,865.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.