தேர்தல் முடிவுடன் அரசியலில் பாரிய மாற்றமொன்றைக் கொண்டுவருவதாக ஜனாதிபதிதான் கூறியுள்ளதாகவும், அடுத்த புதிய பிரதமர் யார் என்ற கேள்வியையும் ஜனாதிபதியிடமேதான் கேட்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவித்தார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்த புதிய அரசியல் மாற்றத்தின் பின்னர் புதிய பிரதமர் யார் என அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கூட்டு எதிர்க் கட்சிக்குக் கிடைத்துள்ள மொத்த வாக்குகளின் விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் பெரும்பாலான மக்கள் கூட்டு எதிர்க் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதை புள்ளிவிபர தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. நாம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு செல்வதாயின் பெரும்பான்மைப் பலத்தை எமக்கு நிரூபிக்க முடியுமாக இருக்கும்.
இருப்பினும், மக்கள் எமக்கு ஒரு செய்தியை இந்த தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர். இதற்கு அமைதியாக செவிமடுத்து, எம்மிடமுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து பலமான ஒரு பயணத்தை தொடர ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.