தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்

344 0

201609040559332669_Today-it-rained-a-few-places-in-Tamil-Nadu-Meteorological_SECVPFலட்சத்தீவு மற்றும் உள்தமிழகம் ஆகிய 2 இடங்களில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு குமரிக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி அங்கிருந்து நகர்ந்து லட்சத்தீவு பகுதிக்கு சென்றது.

தற்போது அந்த மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாலும், மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உள் தமிழகத்தில் உருவாகி இருப்பதாலும் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. அதோடு தற்போது உள்கர்நாடகம் மற்றும் உள்தமிழகத்தில் இன்னொரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (இன்று) மேலடுக்கு சுழற்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது. அது வளிமண்டலத்தில் இறங்கி குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

இன்று (நேற்று) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:

அரக்கோணம் 7 செ.மீ., திருவள்ளூர் 6 செ.மீ., மனமேல்குடி, மருங்காபுரி, திருவலங்காடு, ஆலக்குடி, கோதாகிரி, சின்னக்கலாறு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., நீடாமங்களம், தேவக்கோட்டை, பெருங்கலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிட்டாம்பட்டி, கொடவாசல், பேராவூரணி, உளுந்தூர்ப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.