யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக் காணி விடுவிப்பு தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதுடன் உரியவர்களிடம் காணி பத்திரங்களையும் வழங்கவுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வலி.வடக்கில் உள்ள ஜே233, ஜே234, ஜே235, ஜே236, குரும்பசிட்டி (ஜே-238), கட்டுவன் (ஜே-242), மற்றும் வறுத்தலை விளான் (ஜே241) ஆகிய பகுதிகளில் உள்ள 201 ஏக்கர் காணிகளே இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன் இக் காணி விடுவிப்பின் ஊடாக காங்கேசன்துறை ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் மேற்படி பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் தங்கள் பகுதிகளை சேர்ந்த கிராம சேவகர்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் வரவை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், தங்கள் வரவை உறுதிப்படுத்தியிருக்கும் மக்கள் 25ஆம் திகதி காலை காங்கேசன்துறை புகையிரத நிலைய பகுதிக்கு காலை 9 மணிக்கு வருகை தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வறுத்தலை விளான் பகுதியில் முன்னர் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலும் நாளை யாழ்.வரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மேலும் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றையும் படையினர் மட்டத்தில் ஒழுங்கமைத்திருப்பதாக தெரிய வருகின் றது.
இதேவேளை வலிவடக்கில் ஆறு மாத காலத்தில் மக்களை மீளக்குடியேற்றுவதாக ஜனாதிபதி அளித்த கால அவகாசம் முடிவடைந்திருந்த நிலையில் ஜனாதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போதும் அது தொடர்பாக எதுவும் தெரிவித்திருக்காத நிலையில், மக்கள் ஜனாதிபதியின் செயல் குறித்து வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் கவலையும் விசனமும் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் அடுத்து ஒரு மாத காலத்துக்குள் தமது மீளக்குடியேற்றம் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சாத்வீக ரீதியில் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந் நிலையிலே மேலும் குறிப்பிட்டளவு காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.