மாதவன் தூண்டுதலால் போலி வருமானவரி அதிகாரியாக நடித்தேன் – தீபா வீட்டில் நுழைந்த வாலிபர் வாக்குமூலம்

247 0

தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நுழைந்த வாலிபர், மாதவன் தன்னை நடிக்க சொன்னதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபா மாம்பலம் சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் இவரது வீட்டுக்கு டிப்- டாப் உடை அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது தீபா வெளியில் சென்றிருந்தார். வீட்டில் இருந்த மாதவனிடம் தன்னை வருமான வரி துறை அதிகாரி என்று கூறி அடையாள அட்டையை காட்டிய அந்த வாலிபர் வீட்டில் புகுந்து சோதனை நடத்தினார். வெளியில் சென்றிருந்த தீபாவிடமும் போனில் பேசினார்.

வருமான வரி துறையில் இருந்து வந்துள்ளோம். உங்களிடம் பேச வேண்டும். சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள் என்றும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் மித்தேஷ்குமார் என்கிற பெயர் இடம் பெற்றிருந்தது. தீபாவின் வீட்டில் அந்த வாலிபர் சோதனை நடத்தியபோது வக்கீல்களும், போலீசாரும் அங்கு வந்ததால் மர்ம வாலிபர் திடீரென ஓட்டம் பிடித்தார். வீட்டின் சுற்று சுவரில் ஏறி குதித்து அவர் தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசில் மாதவன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற வாலிபர் போலி வருமான வரித்துறை அதிகாரி என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் சாரங்கன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சேகர் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். போலீஸ் பிடி இறுகியதால் போலி அதிகாரியாக நடித்த வாலிபர் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் திடீரென சரண் அடைந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீபா ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும் மாம்பலம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

சரண் அடைந்த வாலிபரின் பெயர் பிரபாகரன் (31). புதுக்கோட்டை அருகே உள்ள கோச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் தற்போது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். இன்னும் திருமணமாகாத அவர் புதுச்சேரியில் கணேஷ் மெஸ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

அவரிடம் போலீசார் நள்ளிரவில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாதவன்தான் போலி வருமான வரி துறை அதிகாரியாக தன்னை நடிக்கச் சொன்னார் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் போலி அதிகாரி பிரபாகரன் போலீசிடம் ஒப்படைத்தார். சுமார் 7½ நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் பிரபாகரன் பேச்சு அடங்கி உள்ளது.

சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மாதவன்தான் இதுபோன்று தன்னை நடிக்கச் சொன்னார். இது ஒத்திகைதான் என்றும் அவர் தெரிவித்தார். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்று பிரபாகரன் பேசி இருக்கும் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ந்து போனார்கள்.

போலி அதிகாரியாக நடித்த வாலிபர் தீபாவை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அவரது பின்னணியில் வேறு யாரும் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக சரண் அடைந்த வாலிபர் பிரபாகரன், மாதவன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி புகார் கூறி இருப்பது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து மாதவனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வாலிபர் பிரபாகரன் மீது 419 ஐ.பி.சி. (ஆள் மாறாட்டம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு பின்னர் பிரபாகரன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதவன் மீதும் அடுத்தகட்டமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் வாலிபர் பிரபாகரன், மாதவன் சொன்ன மாதிரிதான் நடித்தேன் என்று கூறி உள்ளார். இதனால் எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.

இது தொடர்பாக மாதவனை பிடித்து விசாரணை நடத்தினால் தான் போலி அதிகாரி வி‌ஷயத்தில் உண்மையிலேயே நடந்தது என்ன? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மாதவனும், பிரபாகரனும் இணைந்து தீபாவை மிரட்டி பெரிய அளவில் பணம் பறிக்க திட்டமிட்டார்களா? பிரச்சினை ஆகிவிட்டதும் பிரபாகரன், மாதவனை மட்டும் மாட்டி விடுகிறாரா? என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகவும் முழுமையாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வருமான வரி சோதனை என்ற பெயரில் தீபாவின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள் எதையும் கைப்பற்ற திட்டமிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தீபாவின் வீட்டில் இருந்து வெளியேறிய மாதவன் தற்போதுதான் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

இந்த நிலையில் தீபாவுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட மாதவன் திட்டமிட்டு காய் நகர்த்தியதன் விளைவே போலி அதிகாரி நாடகமாக இருக்கலாம் என்றே போலீசார் கருதுகிறார்கள். இதன் மூலம் தீபா- மாதவன் விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது.

Leave a comment