வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான சபைகளை வெற்றிகொண்டுள்ள போதிலும் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவான சபைகளில் கணிசமான உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையான சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ். மாநகர சபையில் 16 உறுப்பினர்களை பெற்று அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றிய கட்சியாக கூட்டமைப்பு உள்ளது. இங்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 13உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி. 10 உறுப்பினர்களையும் தம்வசப்படுத்தியுள்ளன. ஐக்கிய தேசியக்கட்சி 3 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி 2 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன.
இதேபோன்று நல்லூர் பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேசசபை, பருத்தித்துரை பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகரசபை, வலி வடக்கு பிரதேச சபை, வலி தெற்கு பிரதேச சபை, வலி கிழக்கு பிரதேச சபை, வலி மேற்கு பிரதேச சபை, வலி தென்மேற்கு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, காரைநகர் பிரதேச சபை என்பவற்றிலும் பெரும்பான்மையான உறுப்பினர்களை தமிழ்தேசியக்கூட்டமைப்பு பெற்றுள்ளது.
இந்த சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இரண்டாவது அணியாக கூட்டமைப்பிற்கு அடுத்ததாக உறுப்பினர்களை தன்னகப்படுத்தியுள்ளது. நெடுந்தீவு, ஊர்காவற்றுறை பிரதேச சபைகளை ஈ.பி.டி.பி. கைப்பற்றியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கரைச்சி பிரதேச சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு 17 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இங்கு சுயேச்சைக்குழுவாக போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக்குழு 11 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
இதேபோன்று பூநகரி பிரதேசசபைகளில் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை பெற்றுள்ளதுடன் சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக்குழு நான்கு உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபையிலும் கூட்டமைப்பு ஆறு உறுப்பினர்களை பெற்றுள்ளதைப் போன்று சுயேச்சைக்குழு இரண்டு உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்திலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்றபோதிலும் தனித்து ஆட்சி அமைப்பது சிக்கல் நிலை நிலவிவருகின்றது. வவுனியாவிலும் பல உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் பெருமளவான உள்ளூராட்சி சபைகளில் அதிகூடிய உறுப்பினர்களை கூட்டமைப்பு பெற்றுள்ளபோதிலும் தனித்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை எழுந்துள்ளதால் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி கூட்டாட்சி அமைக்கவேண்டிய நிலைப்பாடும் சில சபைகளில் காணப்படுகின்றது.
யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி 25 உறுப்பினர்களை உள்ளூராட்சி சபைகளில் பெற்றிருக்கின்றது. யாழ். மாநகரசபையில் மூன்று உறுப்பினர்களை பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.