திரிபுரா தேர்தல்: பெண்களுக்கு இலவச கல்வி – பாரதிய ஜனதா அறிவிப்பு

265 0

திரிபுரா மாநில சட்ட சபைக்கு வரும் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் 60 இடங்கள் கொண்ட அம்மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மிக, மிக வலுவான கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் அந்த கட்சி 60-க்கு 50 இடங்களை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளிடையே பலத்த போட்டி காணப்படுகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் தீவிரமாக உள்ளது.

பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 4 தினங்களே உள்ளன. இந்த நிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஏராளமான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை இலவச கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் கல்லூரி தொடங்கப்படும்.

இளைஞர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும். இதன் மூலம் “டிஜிட்டல் இந்தியா” திட்டம் மேம்படுத்தப்படும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழைகள் அனைவருக்கும் இலவச சுகாதார காப்பீடு திட்டம் வழங்கப்படும். அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.340 வழங்கப்படும். அவர்களது ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உறுதிப்படுத்தப்படும்.

அரசு துறைகளில் சுமார் 50 ஆயிரம் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். மத்திய-மாநில உறவு மேம்படும்.

இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment