அன்னை தெரசாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கும் விழா

329 0

therasa_2524240fஅன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் 13 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

1950-ம் ஆண்டு கொல்கத்தா நகரில் ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’ என்னும் அமைப்பை நிறுவி ஏழை, எளியோர், ஆதரவற்றோர், நோயுற்றோரை அரவணைத்து அவர்களுக்கு தனது வாழ்நாளெல்லாம் சேவை செய்தவர் மறைந்த அன்னை தெரசா. சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை பாராட்டி உலக அமைதிக்கான நோபல் பரிசும் 1979-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

அவர் புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்கிறார்.

இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பேராயர்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதற்காக அவர்கள் நேற்று முன்தினமே ரோம் நகருக்கு சென்றுவிட்டனர்.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதையொட்டியும், ரோம் நகரை பயங்கரவாதிகள் ஏற்கனவே தங்களுடைய தாக்குதல் இலக்கு பட்டியலில் வைத்து இருப்பதாலும் புனித பீட்டர் சதுக்கம் மற்றும் வாடிகன் தேவாலயம் ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

வாடிகன் நோக்கி செல்லும் பிரதான சாலை கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டு உள்ளன. ஏற்கனவே வாடிகனில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இன்று லட்சக்கணக்கானவர்கள் வருவார்கள் என்பதால் கூடுதலாக ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி, வாடிகன் புனித அனஸ்தசியா தேவாலயத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலிய ஆகிய மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடக்கின்றன.