பிரேசில் நாட்டின் அதிபராக இருந்தவர் தில்மா ரூசெப் (வயது 68). இவர் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது, தான் வெற்றி பெற வசதியாக, நாட்டின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று காட்டுவதற்கு, பட்ஜெட்டில் சட்ட விதிகளை மீறி நாட்டின் வருமானத்தை உயர்த்தி காட்டினார் என புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவர் மீது அந்த நாட்டின் பாராளுமன்ற செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 61 பேரும், எதிராக 20 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டு, துணை அதிபராக இருந்து வந்த மிச்செல் டெமர் அதிபராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் தனது பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து தில்மா, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு செய்துள்ளார். அவரது சார்பில் இந்த மேல்-முறையீட்டை அவரது வக்கீல் ஜோஸ் எட்வர்டோ கார்டோஸோ தாக்கல் செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இதுவரை தனது பதவி நீக்கம் தொடர்பாக பல முறை அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினாலும், அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே இந்த முறையும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.