இன்று புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அன்னையின் மணல் சிற்பத்தை உருவாக்கி காணிக்கை செலுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மே மாதம் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், இன்று வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் அன்னையின் மணல் சிற்பத்தை உருவாக்கி காணிக்கை செலுத்தியுள்ளார்.
’ஆதரவற்றோருக்கு எல்லாம் தாயாக இருந்து அன்பு செலுத்திய அன்னைக்கு காணிக்கை’ என தனது மணல் சிற்பத்தில் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளதும், இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.