20 ஆண்டுகளாக ரவுடிகளுடன் போராடும் சென்னை போலீஸ்

2119 0

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், முற்றிலும் ஒழிக்க முடியாமல் கடந்த 20 ஆண்டுகளாக போலீசார் போராடி வருகின்றனர்.

சென்னையில் ரவுடிகள் பெருகி வருவதை சமீபத்தில் நடந்த நிகழ்வு உணர்த்துகிறது. மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்த நாளை ரவுடிகள் புடைசூழ கொண்டாட திட்டமிட்டபோது, போலீசார் சுற்றி வளைத்து, 75 பேரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடியவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் ரவுடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். ரவுடிக்கும்பலின் தலைவனாக ‘கேங்ஸ்டர்’ ஆக செயல்படும் ரவுடியை தாதா பட்டியலில் போலீசார் இடம்பெறச் செய்துள்ளனர். இவர்கள் ஏ பிளஸ் பிரிவில் ரவுடிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு வலது கையாக செயல்படும் ரவுடிகள் ஏ பிரிவிலும், அவர்கள் திட்டமிட்டபடி ரவுடியிசத்தை செய்து முடிக்கும் ரவுடிகள் பி பிரிவிலும் உள்ளனர். சி பிரிவில் இடம் பெற்றுள்ள ரவுடிகளில் பெரும்பாலானவர்கள் திருந்தி வாழ நினைப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்களை ஏ மற்றும் பி பிரிவு ரவுடிகள் பின் தொடர்ந்து ரவுடித் தொழிலை தொடர வைக்க நினைப்பார்கள்.

இப்படி ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள ரவுடிகள் கடந்த 20 ஆண்டுகளாகவே சென்னை போலீசாருக்கு பெரும் தலைவலியாகவே உள்ளனர். ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பல நேரங்களில் என்கவுன்டரிலும் ரவுடிகளை தீர்த்து கட்டியுள்ளனர். சென்னையில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு ரவுடிகள் பலர் தொடர்ந்து இரையாகியுள்ளனர். இருப்பினும் புதிது புதிதாக ரவுடிகள் உருவாகி கொண்டே இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்துவது சவாலாகவே உள்ளது.

இருப்பினும் ரவுடிகளுக்கு போலீஸ் மீதான பயம் இப்போது கொஞ்சம் குறைந்து இருப்பது போலவே தெரிகிறது. மலையம்பாக்கத்தில் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் திரண்டதே இதற்கு சிறந்த உதாரணமாகும். சென்னை மத்திய குற்றப் பிரிவில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்களது வேகத்தை இன்னும் தீவிரபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் இப்போது எழுந்துள்ளது.

ரவுடிகளை கட்டுப்படுத்த அவர்களது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார் சிறையில் இருந்து அவர்கள் வெளியில் வந்தவுடன் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது மீண்டும் பிடித்து சிறையில் அடைப்பார்கள். அதுபோன்ற நடவடிக்கைகள் சமீப காலமாக வேகப்படுத்த படவில்லையோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே வெளியில் இருக்கும் ரவுடிகள் யார்-யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உடனடியாக கண்டுபிடித்து போலீஸ் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தபட வேண்டும். அப்போதுதான் சென்னையில் ரவுடிகளில் கொட்டத்தை அடக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. ரவுடிகளின் ராஜ்யத்தை ஒழிக்க சென்னை போலீசார் எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை என்ன என்பதே இப்போதே மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

Leave a comment