அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தகுதித்தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தேர்வர்கள் சான்றிதழ் பரிசீலனைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர். ஆனால், அதிக மதிப்பெண் எடுத்த பெரும்பாலானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் மனு அளித்தனர். விசாரணையில் இதில் பெருமளவில் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. 57 மதிப்பெண் எடுத்தவர்கள் 140 மதிப்பெண்கள் எடுத்தது போன்றும், 150-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் 70 முதல் 80 மதிப்பெண் பெற்றதாகவும் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது.
மதிப்பெண் பட்டியலை ஸ்கேன் செய்யும்போது இவ்வாறு திருத்தங்கள் செய்துள்ளனர். திருத்தங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரிடமும் இருந்தும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, தேர்வு முடிவில் முறைகேடு நடந்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 156 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த டிசம்பர் 27-ம் தேதி கிழக்கு முகப்பேரை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் கணேசன் (38) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் மதிப்பெண்களை பதிவிட்ட டேட்டா என்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த ஷேக் தாவூத் நாசர் (32), தனியார் நிறுவன மேலாளர் ரகுபதி (34) மற்றும் அயனாவரத்தை சேர்ந்த சுரேஷ் பால் (34), திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் சின்னசாமி (52), கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் (32), சிட்லப்பாக்கத்தை சேர்ந்த நாதன் (45) ஆகிய 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ் பால், மற்றும் கால் டாக்ஸி டிரைவர் கணேசன் ஆகிய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் அளித்த தகவலின்படி, திருச்சி வயலூரை சேர்ந்த நாராயண் என்பவரின் மகன் தினேஷ் (26) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று திருச்சியில் கைது செய்தனர். அவர், திருச்சியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர், முக்கிய பிரமுகர்களுடன் நல்ல தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு எழுதிய நபர்களை நேரில் சந்தித்து அவர்களது மதிப்பெண் பட்டியலை பெற்று, கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்காக தினேஷுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தினேஷ் வசூலித்த பணத்தை யார் மூலம் கொடுத்தார். அதற்காக, அவருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது. இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மாவட்ட வாரியாக பலர் ஈடுபட்டுள்ளதால் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. மறுதேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் மாதம் தேர்வு நடக்கும் என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.