இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தை கைகளால் தள்ளும் ஊழியர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொலைதூர பயணம் செய்யும்போது பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றுவிட்டால், அதில் பயணம் செய்தவர்களை வைத்தே அந்த பேருந்தை குறிப்பிட்ட இடம் வரை தள்ள வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தோனேசியா நாட்டில் விமானத்தை 20 பேர் கைகளால் தள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
இந்தோனேசிய நாட்டின் விமான நிறுவனம் கருடா இந்தோனேசியா ஏர்லைன்ஸ். கிழக்கு நுசா டெரங்கா மாகாணத்தில் உள்ள தம்போலகா விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று வந்து இறங்கியது.
அப்போது திடீரென விமான நிலைய ஊழியர்கள் சுமார் 20 பேர் அங்கு வந்து நின்று கொண்டிருந்த விமானத்தை கையால் தள்ளினர். இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விமானம் பழுதாகி நிற்பதாகவும், அதனால் அதில் பயணம் செய்தவர்கள் இறங்கி விமானத்தை கைகளால் தள்ளுவதாகவும் அதிகமானோர் கேலியும், கிண்டலுமாக பதிவிட்டனர்.
இதுகுறித்து விமான நிறுவனத்தினர் கூறுகையில், விமானம் இறங்கும்போது தவறாக திசைதிருப்பி நிறுத்தப்பட்டது. அதை சரிசெய்யவே விமான நிலைய ஊழியர்கள் அதை கைகளால் தள்ளினர். மேலும், விமானத்தை பின்னோக்கி தள்ளும் கருவி இல்லாத நிலையில் ஊழியர்கள் கையால் தள்ளினார்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்த சி ஆர் ஜெ 1000 விமானம் சுமார் 36 ஆயிரத்து 968 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.