இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தொடர்பில், அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இந்த மாதம் முக்கிய தீர்மானம் ஒன்றுக்கு வரவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தமாதம் 23ம் திகதி அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது, அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதிலிகள் முகாமில் இருந்து 1250 ஏதிலிகளை அமெரிக்கா பொறுப்பேற்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தார்.
எனினும் பின்னர் இந்த உடன்படிக்கையை மதித்து அமுலாக்குவதற்கு ட்ரம்ப் இணங்கி இருந்த நிலையில், அதன்கீழ் சில ஏதிலிகள் அமெரிக்காவிற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அமுலாக்குவது குறித்தும், மானஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை இந்த திட்டத்தில் உள்வாங்குவது குறித்தும், அவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.