புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த வழக்கில், சிறுமியின் மாமனாரையும் பொலிஸார் கொலை வழக்கில் இணைத்துள்ளனர். சிறுமிக்குத் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார் என்பதே பொலிஸாரின் குற்றச்சாட்டு.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி உயிரிழந்திருந்தார். இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதன்போது மாணவியைப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற மாணவியின் மாமனாரையும் பொலிஸார் கைது செய்து வழக்கில் சந்தேக நபராக இணைத்திருந்தனர்.
விசாரணையின் போது நீதிவானால் , ‘‘குற்றத்திற்கு உடந்தை அளித்தவர்களை , அந்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேக நபர்களாக வழக்கில் இணைக்கலாம். ஆனால் மாமனாரை எந்த அடிப்படையில் வழக்கில் இணைக்கப்பட்டார்’’ என்று கேட்கப்பட்டது.
மாணவிக்கு தலைக்கவசம் அணியாது , மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால் வழக்கில் இணைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
“தலைக்கவசம் அணியாது அழைத்து சென்றமை தனி வழக்காக பதிவு செய்யப்பட வேண்டுமே தவிர விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவித்த குற்றசாட்டில் சந்தேக நபர்களில் ஒருவராக அவரை இணைக்க முடியாது” என்று நீதிவான் பொலிஸாருக்குக் கண்டிப்புடன் அறிவுறுத்தலையும் வழங்கினார்.