வெனிசூலாவில் ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அரசுக்கு ஆதரவான தேர்தல் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்தது.
வெனிசூலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ (வயது 55) அதிபராக உள்ளார். எண்ணெய் வளம் அதிகம்கொண்ட அந்த நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் அங்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என ஆளும் சோஷலிஸ்டுகள் கூறி வந்தனர்.
எதிர்க்கட்சியான டொமினிக்கன் குடியரசு கட்சியின் 2 தலைவர்கள் தேர்தலில் போட்டி போட முடியாதபடிக்கு தடை செய்யப்பட்டு உள்ள நிலையில், மற்றொரு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு வசதியாக அங்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்தக் கட்சி விரும்பியது.
இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சி தரப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை முறிந்து போனது.
இந்த நிலையில் அங்கு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அரசுக்கு ஆதரவான தேர்தல் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.மேலும், இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெறும் என்ற அச்சம் நிலவுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாக கராக்கஸ் பூங்காவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நடனமாடியதுடன், ஆதரவாளர்களை கட்டித்தழுவி உற்சாகப்படுத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, “2019-2025 காலகட்டத்திற்கு நிக்கோலஸ் மதுரோதான் அதிபர் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்” என்று கூறினார்.
இவர் பஸ் டிரைவராக, தொழிற்சங்க தலைவராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.