தமிழர்கள் என்று வெளிநாடுகளில் போராடுபவர்கள் தமிழர்கள் என்ற போர்வையில் மாத்திரமே செயற்படுகின்றனர். இன,மத மொழி வேறுபாடுகள் இன்றி இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டுடன் எம்முடன் என்றும் இணைந்து செயற்படுபவர்களே தமிழர்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியின் பணி நீக்கம் மற்றும் மீள் பணியமர்த்தல் விவகாரம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்கள் மத்தியில் தமது அதிகாரத்தினை பிரயோகிப்பதில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பாரிய போட்டித் தன்மை காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடே பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பெர்னாண்டோவின் பதவி நீக்கம் மற்றும் மீண்டும் பதவியில் அமர்த்தல் என்பன காணப்படுகின்றன.
பிரதமர் பதவி நீக்குவதும், பின்னர் ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி மீண்டும் பதவியில் அமர்த்துவதும் அதிகார துஷ்பிரயோகமே. பிரதமரின் கைப்பாவையாக செயற்படுவதை ஜனாதிபதி பிணைமுறி விவகாரத்தில் நிரூபித்துவிட்டார். திருடனிடமே திருட்டின் திட்டத்தினை கேட்டமையானது இணக்கப்பாடற்ற தன்மையினை வெளிப்படுத்துகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி 2015ஆம் ஆண்டு தொடக்கம் வெறும் நாம நிர்வாகியாகவே செயற்படுகின்றார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களின் ஆதரவினை பெற்று ஐக்கிய தேசிய கட்சியின் சகல விதமான தொடர்புகளிலும் இருந்து விடுபட முயல்கின்றமையினை தேர்தல் பிரசாரங்களில் வெளிப்படுத்தி வருகின்றார்.
தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் பாரிய இணக்கப்பாடற்ற தன்மை காணப்படுகின்றது.ஐக்கிய தேசிய கட்சி தற்போது மோசடியால் தமது பாரம்பரிய அரசியல் வரலாற்றின் பெருமைகளை இழந்து விட்டது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொதுமக்கள் நல்லா ட்சி என்ற போர்வையில் கபட நாடகத்தினை அரங்கேற்றும் அர சாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆவலாக உள்ளனர். பாரிய மாற்றத்தினை எதிர்கொள்ள இரு பிரதானகட்சிகளும் தயாராக இருக்க வேண்டும். தாமரை மொட்டின் வெற்றி தற்போது உறுதியாக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.