தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் தலைவர்களுடன், சர்வதேச நாடுகளுடன் பேசிய ஒரே கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்துள்ளதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இதனை எவரும் மறுக்க முடியாது. அதற்கு எவரும் உரிமை கோர முடியாது. வேறு எவரும் பேசக்கூடிய நிலையிலும் இருந்திருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். நல்லூரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் ‘தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினை தொடர்பில் பேசக்கூடிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். அந்த நிலைமை தொடர வேண்டும். அந்த நிலைமை பலமடைய வேண்டும்.
இன்று நாங்கள் சர்வதேசத்தின் மதிப்பை நாங்கள் பெற்றிருக்கின்றோம். சர்வதேச சமூகத்தின் கருத்தின் அடிப்படையில், தமிழ் மக்களுடைய நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்ற நிலையை நாங்கள் அடைந்திருக்கின்றோம்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.குறித்த கூட்டத்தில் பாதுகாப்பு பலமடங்காக குறைக்கப்பட்டு இருந்தது. பத்துக்கும் குறைவான விசேட காவல்துறை அதிரடிப்படையினரும் மிக குறைந்தளவான காவல்துறையினருமே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் வன்னி மாவட்டங்களில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பரப்புரை கூட்டங்களில் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்டு, கூட்டத்திற்கு வந்தவர்களும் கடும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.அது தொடர்பிலான ஒளிப்படங்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கடும் சர்ச்சையை கிளப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.