மத்திய வங்கி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரை சிறைக்கு சென்று பார்க்கச் சென்றவர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்திற்கு வெளியிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.
அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கல் செய்தது முதல் பிரதமர் முன்னெடுத்த செயற்பாடுகள் வரை பார்க்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையாக மோசடிகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தும் அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் நேர்மையானது அல்ல. ஆகவே அவரினால் தனது பொறுப்பில் இருந்து விலக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக பிரதமர் ரணில் வி்ககிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்