பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் லண்டன் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்தமை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.
இதையடுத்து, அவரை சேவையில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்கர, 2008 – 2009 காலப் பகுதியில் வெலிஓய, ஜானகபுர பகுதியில் போரிட்ட 11 கெமுனு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
போர்க்குற்றச்சாட்டுக்களில், குறித்த படைப்பிரிவு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.