லண்டனில் வேனை மோதி தாக்குதல் – பயங்கரவாதிக்கு 43 ஆண்டு ஜெயில்

354 0

லண்டனில் வேனை மோதி தாக்குதல் நடத்திய டேரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 43 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் சாலையில் அமைந்து உள்ள இரண்டு மசூதிகளில் முஸ்லிம்கள் கடந்த ஜூன் மாதம், நள்ளிரவு நேரத்தில் தொழுகை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அந்த கூட்டத்தினர் மீது ஒருவர் வேனை மின்னல் வேகத்தில் ஓட்டிச்சென்று மோதி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் மேக்ரம் அலி (வயது 51) என்பவர் பலி ஆனார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய டேரன் ஆஸ்பர்ன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது லண்டன் ஊல்விச் குரோன் கோர்ட்டில் வழக்கு தாக்கலானது.

இந்த வழக்கை நீதிபதி சீமா கிரப் விசாரித்தார். விசாரணை முடிவில், தொழுகை முடித்து வந்த முஸ்லிம்கள் மீது வேனை மோதி தாக்குதல் நடத்தி, மேக்ரம் அலியை கொன்ற டேரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 43 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மேக்ரம் அலியின் குடும்பத்தினர் அதுபற்றி நினைவுகூர்கிறபோது, “அப்போது நாங்கள் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது” என்றனர். அவரது மகள் ரூஜினா அக்தர், “பயங்கரவாத தாக்குதல்களில் பலியாகிற அப்பாவி மக்களைப் போன்றவர்தான் எனது தந்தையும். ஆனால் அவரது மரணம், மிகுந்த வன்செயலால் நிகழ்ந்து விட்டது. அவர் அமைதியான, எளிமையான மனிதர். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்தது இல்லை” என்று கூறினார்.

Leave a comment