பேராசிரியர் பணியிடத்துக்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜை பிப்ரவரி 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க லஞ்ச ஒழிப்புத்துறை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். துணை வேந்தர் கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள துணைவேந்தரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் முடிவில் துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இந்த புகார் தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக பேராசியரான தர்மராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் சுமார் 13 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணை நிறைவடைந்ததையடுத்து நேற்றிரவு இருவரையும் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் பிப்ரவரி 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.