ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக அவர் பதவியில் இருக்கும் காலத்திலேயே வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்றும் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும் போது தான் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.
அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கப்பட்டதன் பின்னர், அல்லது ஓய்வு பெற்றதன் பின்னர், அல்லது தேர்தல் தோல்வியின் மூலம் பதவியில் இருந்து விலகிய பின்னர், முன்னர் இழைத்த குற்றங்களுக்காக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
குற்ற வழக்கொன்றில் குற்றவாளியாக அறியப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கின்ற தண்டணை 07 வருட காலத்துக்கு பிராஜ உரிமை நீக்கப்படுவது மாத்திரமே.
எனினும் அது போதாது. அதன் காரணமாக வாழ்நாள் பூராகவும் பிரஜா உரிமையை நீக்குவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அரசியல் தலையீடற்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்று பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.